Back to top

Sabbath Bible Lessons

நற்செய்தியின்படி யோவான் – பகுதி 1

 <<    >> 
பாடம் 7 ஓய்வுநாள், பிப்ரவரி 15, 2025

இயேசுவும் யோவான் ஸ்நானகனும்

ஞாபக வசனம்: "அவர் பெருகவும், நான் சிறுகவும் வேண்டும்" (யோவான் 3:30).

"யோவான் ஸ்நானகன் தீர்க்கதரிசிகளில் மிகப் பெரிய தீர்க்கதரிசி என்று நமது இரட்சகரால் அறிவிக்கப்பட்டார். ஆயினும் இந்த தேவ மனிதனின் மொழிக்கும், சிலுவையின் ஊழியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலரின் மொழிக்கும் எவ்வளவு வித்தியாசம். அவர் கிறிஸ்துவா என்று கேட்கப்பட்டபோது, யோவான் தன் எஜமானின் பாதரட்சைகளை அவிழ்க்கக்கூட தான் தகுதியற்றவன் என்று அறிவிக்கிறார்." — Testimonies for the Church, vol. 5, p. 224.

வாசிக்க பரிந்துரைக்கப்பட்ட பகுதி:   Testimonies for the Church, vol. 5, pp. 721-729

ஞாயிறு பிப்ரவரி 9

1. சீடர்கள் மத்தியில் ஒரு பிரச்சன

௧. யோவானின் சீஷர்கள் மற்றும் யூதர்கள் மத்தியில் என்ன கேள்வி எழுந்தது? யோவான் 3:25.

"இயேசுவின் புகழ் பெருகி வருவதைக் குறித்து யோவானின் சீடர்கள் பொறாமையுடன் பார்த்தார்கள். அவருடைய வேலையை விமர்சிக்க அவர்கள் தயாராக நின்றனர், சீக்கிரத்தில் அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. ஆத்துமாவைப் பாவத்திலிருந்து சுத்திகரிக்க ஞானஸ்நானம் பயனளிக்கிறதா என்று அவர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே ஒரு கேள்வி எழுந்தது; இயேசுவின் ஞானஸ்நானம் யோவானின் ஞானஸ்நானத்திலிருந்து அடிப்படையில் வேறுபடுகிறது என்று அவர்கள் வாதிட்டனர். ஞானஸ்நானத்தின்போது பயன்படுத்துவதற்குத் தகுந்த வார்த்தைகளின் வடிவத்தைக் குறித்ததிலும், இறுதியாக ஞானஸ்நானம் கொடுப்பதற்கு பிந்தையவருக்கு உரிமை இருப்பதைக் குறித்ததிலும் கிறிஸ்துவின் சீஷர்களுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்." — The Desire of Ages, p. 178.

௨. யோவானின் சீஷர்கள் கிறிஸ்துவின் வேலையைக் குறித்து தங்கள் பொறாமையை எவ்வாறு வெளிப்படுத்தினார்கள்—அவர் என்ன உன்னதமான பதிலைக் கொடுத்தார்? யோவான் 3:26, 27.

"மனிதகுலத்திற்கு பொதுவான தவறுகளும் பலவீனங்களும் யோவானுக்கு இயல்பாகவே இருந்தன, ஆனால் தெய்வீக அன்பின் தொடுதல் அவரை மாற்றியிருந்தது. சுயநலமும் பேராசையும் இல்லாத, பொறாமை என்ற மாயைக்கு அப்பாற்பட்ட சூழலில் அவர் வாழ்ந்தார். தம்முடைய சீஷர்களின் அதிருப்திக்கு அவர் அனுதாபம் காட்டவில்லை, ஆனால் மேசியாவுடன் தனக்குள்ள உறவை அவர் எவ்வளவு தெளிவாக புரிந்துகொண்டார் என்பதையும், அவர் வழியை ஆயத்தம் செய்தவரை எவ்வளவு மகிழ்ச்சியுடன் வரவேற்றார் என்பதையும் காட்டினார்." — Ibid., p. 179.


திங்கள் பிப்ரவரி 10

2. யோவானின் பணி

௧. தான் செய்த ஊழியத்தைப் புரிந்துகொண்டதை யோவான் எப்படிக் காட்டினார்? யோவான் 3:28, 29.

"நிச்சயிக்கப்பட்ட தரப்பினரிடையே ஒரு தூதுவராக செயல்பட்டு, கலியாணத்திற்கு வழியைத் தயார் செய்யும் நண்பராக யோவான் தன்னை பிரதிநிதித்துவப்படுத்தினார். மணமகன் மணமகளை வரவேற்றபோது, நண்பரின் நோக்கம் நிறைவேறியது. யாருடைய ஐக்கியத்தை அவர் ஊக்குவித்தாரோ அவர்களின் மகிழ்ச்சியில் அவர் மகிழ்ந்தார். ஆகவே மக்களை இயேசுவிடம் வழிநடத்த யோவான் அழைக்கப்பட்டிருந்தார், இரட்சகரின் பணியின் வெற்றியைக் காண்பது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது." — The Desire of Ages, p. 179.

௨. யோவானின் கிரியையையும், நம்முடைய கிரியையையும் விவரியுங்கள். யோவான் 1:23, 29.

"மீட்பரை விசுவாசத்தோடு பார்த்த யோவான், சுய துறப்பின் உச்சிக்கு உயர்ந்தார். அவர் மனிதர்களைத் தம்மிடம் ஈர்க்க நாடவில்லை, ஆனால் அவர்கள் தேவ ஆட்டுக்குட்டியின் மீது ஓய்வெடுக்கும் வரை அவர்களின் எண்ணங்களை மேலும் மேலும் உயர்த்த முயன்றார். அவரே ஒரு குரலாக, வனாந்தரத்தில் ஒரு கூக்குரலாக மட்டுமே இருந்தார். எல்லோருடைய கண்களும் ஜீவ ஒளியை நோக்கித் திரும்பும்படிக்கு, இப்போது அவர் மௌனத்தையும் தெளிவின்மையையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

"தேவனுக்காக ஊழியர்களாக அழைக்கப்பட்டவர்கள் உண்மையுளவர்களாக இருந்தால் அவர்கள் தங்களுக்காக மேன்மையை நாட மாட்டார்கள். சுய அன்பு கிறிஸ்துவின் மீதுள்ள அன்பில் விழுங்கப்படும். சுவிசேஷத்தின் விலைமதிப்பற்ற காரணத்தை எந்த எதிர்ப்பாலும் அழிக்கமுடியாது. 'இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி' (யோவான் 1:29) என்று யோவான் ஸ்நானகன் அறிவித்ததைப்போல அறிவிப்பது தங்கள் வேலை என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். அவர்கள் இயேசுவை உயர்த்துவார்கள், அவருடன் மனிதகுலம் உயர்த்தப்படும். 'நித்தியத்தில் வாசம்பண்ணினவரும், பரிசுத்தர் என்னும் நாமமுள்ளவருமான உன்னதமானவர் சொல்லுகிறது என்னவென்றால்; தாழ்மையுள்ளவர்களுடைய ஆவியைப் புதுப்பிக்கவும், நொறுங்குண்டவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்காகவும், மனந்திரும்புதலும் தாழ்மையுமுள்ள ஆவியுள்ளவரோடேகூட நான் உயர்ந்ததும் பரிசுத்தமுமான ஸ்தலத்திலே வாசமாயிருக்கிறேன்" (ஏசாயா 57:15). — The Desire of Ages, pp. 179, 180.

"உங்கள் இன்பத்தையும் வசதியையும் நாடாமல், தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளவும், செய்யவும் நாடுங்கள். உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டிக்கு நான் ஒரு ஆத்துமாவைச் சுட்டிக்காட்டக்கூடாதா என்று ஒவ்வொருவரும் விசாரிக்கட்டும். விரக்தியில் இருக்கும் ஒருவருக்கு நான் ஆறுதல் சொல்ல முடியாதா? தேவனுடைய ராஜ்யத்தில் சில ஆத்துமாக்களைக் காப்பாற்றும் கருவியாக நான் இருக்க முடியாதா? நம்முடைய இருதயங்களில் தேவனுடைய ஆவியானவரின் ஆழமான அசைவை நாங்கள் விரும்புகிறோம், நாங்கள் வெண் வஸ்திரத்தை (கிறிஸ்துவின் நீதி) நமக்காக பாதுகாக்க முடியும் என்பது மட்டுமல்லாமல், மற்றவர்களின் பெயர்கள் ஒருபோதும் துடைக்கப்படாமல் ஜீவ புத்தகத்தில் பதிவு செய்யப்படும்படி செல்வாக்கு செலுத்த முடியும். — Historical Sketches, p. 140.


செவ்வாய் பிப்ரவரி 11

3. ஆவியின் வரம்

௧. கிறிஸ்துவின் செய்தியைக் கேட்ட பெரும்பான்மையான மக்கள் என்ன செய்தார்கள்? யோவான் 3:32.

"எல்லா மனுஷரும் கிறிஸ்துவிடம் வருகிறார்கள் என்று யோவானுடைய சீஷர்கள் அறிவித்தார்கள்; ஆனால் தெளிவான உட்பார்வையுடன், யோவான் கூறியதாவது, 'அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்கிறதில்லை;' ஆகவே வெகு சிலரே அவரை பாவத்திலிருந்து இரட்சகராக ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருந்தனர். ஆனால், 'தேவன் சத்தியமுள்ளவரென்று அவருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டவன் முத்திரைபோடுகிறான்' (யோவான் 3:33). — The Desire of Ages, pp. 179, 180.

௨. பரிசுத்த ஆவியின் வரம் யாருக்கு அருளப்பட்டது? யோவான் 3:34.

"நாம் சுயத்தை வெறுமையாக்க தயாராக இருப்பதால் மட்டுமே பரலோகத்தின் ஒளியைப் பெற முடியும். கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிற ஒவ்வொரு சிந்தனையையும் சிறையிருப்புக்குக் கொண்டுவர நாம் சம்மதிக்காவிட்டால், நாம் தேவனுடைய தன்மையைப் பகுத்தறியவோ, கிறிஸ்துவை விசுவாசத்தினாலே ஏற்றுக்கொள்ளவோ முடியாது. இதைச் செய்யும் அனைவருக்கும் பரிசுத்த ஆவியானவர் அளவில்லாமல் கொடுக்கப்படுகிறார். கிறிஸ்துவுக்குள் 'தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாய் வாசமாயிருக்கிறது, அவருக்குள் நீங்கள் நிறைவாயிருக்கிறீர்கள்' (கொலோசெயர் 2:9,10,Rv.))”—Ibid., p. 181.

௩. பரிசுத்த ஆவியானவரின் அதிக அளவைப் பெறுவதற்கான திறவுகோல் வேதத்தில் எவ்வாறு மேலும் வெளிப்படுத்தப்படுகிறது? யோவான் 14:15–17; அப்போஸ்தலர் 5:32.

"'நான் நம்புகிறேன்' என்று சொல்வது மட்டுமல்ல, சத்தியத்தை நடைமுறையில் கடைப்பிடிக்கவும் வேண்டும். நம்முடைய வார்த்தைகளில், நமது நடத்தைகளில், நமது குணாதிசயங்களில் தேவனுடைய சித்தத்திற்கு இணங்குவதன் மூலம், அவருடனான நமது தொடர்பை நிரூபிக்கிறோம். நியாயப்பிரமாணத்தை மீறும் பாவத்தை ஒருவன் துறக்கும்போது, அவனுடைய வாழ்க்கை நியாயப்பிரமாணத்திற்கு இசைவாக, பரிபூரண கீழ்ப்படிதலுக்குள் கொண்டுவரப்படும். இது பரிசுத்த ஆவியானவரின் கிரியை. கவனமாகப் படிக்கப்பட்ட வார்த்தையின் ஒளி, மனசாட்சியின் குரல், ஆவியானவரின் முயற்சிகள், முழு நபர், சரீரம், ஆத்துமா மற்றும் ஆவியை மீட்க ஒரு முழு தியாகத்தையும் கொடுத்த கிறிஸ்துவுக்கு உண்மையான அன்பை இருதயத்தில் உருவாக்குகின்றன. கீழ்ப்படிதலில் அன்பு வெளிப்படுகிறது. தேவனை நேசித்து அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கும், அவரை நேசித்து அவருடைய கட்டளைகளைப் புறக்கணிப்பவர்களுக்கும் இடையே எல்லைக்கோடு சரியாகவும் தெளிவாகவும் இருக்கும். — Evangelism, p. 308.


புதன் பிப்ரவரி 12

4. ஞானஸ்நானத்தின் மதிப்பு

௧. ஞானஸ்நானம் எடுக்கும்போது, கிறிஸ்துவுக்காக நாம் எடுக்கும் முயற்சியை புரிந்துகொள்வது எதற்காக முக்கியம்? யோவான் 3:36.

"கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல், ஞானஸ்நானம், மற்ற எந்த சேவையையும் போலவே, ஒரு பயனற்ற வடிவம்." — The Desire of Ages, p. 181.

"கிறிஸ்துவின் ஞானஸ்நானதையோ அல்லது யோவான் பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்டதா என்பதைக் குறித்து தர்க்கம் தேவையில்லை. கிறிஸ்துவின் கிருபையே ஆத்துமாவுக்கு ஜீவனைக் கொடுக்கிறது." — Ibid., p. 172.

"கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே அழியாமையைப் பெற முடியும். இயேசு கூறியதாவது: குமாரனை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, குமாரனை விசுவாசியாதவன் ஜீவனைக் காண்பதில்லை (யோவான் 3:36). ஒவ்வொரு மனிதனும் நிபந்தனைகளுக்கு இணங்கினால் இந்த விலைமதிப்பற்ற ஆசீர்வாதத்தைப் பெறலாம். சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்து மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பார்.’ரோமர் 2:7” — The Great Controversy, p. 533.

"ஞானஸ்நானம் என்பது இந்த உலகத்தை மிகவும் புனிதமாக துறப்பதாகும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்ற மூன்று பேர்களின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றவர்கள், தங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையின் நுழைவாயிலில், அவர்கள் சாத்தானின் சேவையை விட்டுவிட்டு, அரச குடும்பத்தின் உறுப்பினர்களாக, பரலோக ராஜாவின் பிள்ளைகளாகிவிட்டதாக பகிரங்கமாக அறிவிக்கப்படுகிறார்கள். — Testimonies for the Church, vol. 6, p. 91.

௨. ஞானஸ்நானம் குறிப்பிடும், நிஜ வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தலின் ஆழத்தை வெளிப்படுத்திய யோவான் ஸ்நானகரின் திடுக்கிடும் வார்த்தைகளை விளக்குங்கள்? லூக்கா 3:7, 8.

"யோவான் கோடரியை மரத்தின் வேரில் வைத்தான். விளைவுகளுக்குப் பயப்படாமல், அவர் பாவத்தைக் கடிந்துகொண்டு, தேவ ஆட்டுக்குட்டிக்கு வழியை ஆயத்தம் செய்தார்.

"யோவானின் வல்லமைவாய்ந்த, கூர்மையான சாட்சிகளைக் கேட்டபோது ஏரோது மனதளவில் பாதித்தான். தன்னை சீஷராவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆழ்ந்த அக்கறையோடு விசாரித்தான். தன் சகோதரனின் மனைவியை அவள் கணவன் உயிரோடிருக்கையில், அவளை விவாகம் செய்யப்போகிறான் என்ற உண்மையை யோவான் அறிந்திருந்தான், மேலும் இது கட்டளையின்படி நியாயமல்ல என்று ஏரோதுக்கு தீர்க்கமாக சொன்னான்." — Early Writings, p. 154.

"யோவான் ஸ்நானகன் பாவத்தை தாழ்மையான வேலையில் இருந்தவர்களிடமும் உயர் பதவியில் இருந்தவர்களிடமும் வெளிப்படையான கண்டனத்துடன் எதிர்கொண்டார். அரசர்களும் பிரபுக்களும் கேட்டாலும் நிராகரித்தாலும் அவர்களுக்கு உண்மையை அறிவித்தார். அவர் தனிப்பட்ட முறையிலும், குறிப்பாகவும் பேசினார். — Selected Messages, bk. 2, p. 149.


வியாழன் பிப்ரவரி 13

5. ஒரு புத்திசாலித்தனமான முறை

௧. பரிசேயர்கள் யோவானுக்கும் தனக்கும் இடையே ஒரு நெருக்கடியை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்பதை உணர்ந்த இயேசு என்ன செய்தார்? யோவான் 4:1–3.

"தம்முடைய சொந்த சீஷர்களுக்கும் யோவானின் சீஷர்களுக்கும் இடையில் ஒரு பிரிவினையை உருவாக்க [பரிசேயர்கள்] எந்த முயற்சியையும் விடமாட்டார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகிற்கு இதுவரை வழங்கப்பட்ட மிகப் பெரிய தீர்க்கதரிசிகளில் ஒருவரை அடித்துச் செல்லும் புயல் திரண்டு வருவதை அவர் அறிந்திருந்தார். தவறான புரிதல் அல்லது கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் தவிர்க்க விரும்பி, அவர் அமைதியாக தனது வேலைகளை நிறுத்தி, கலிலேயாவுக்குத் திரும்பினார். நாம், சத்தியத்திற்கு விசுவாசமாக இருக்கும்போது, முரண்பாடு மற்றும் தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் அனைத்தையும் தவிர்க்க முயற்சிக்க வேண்டும். ஏனெனில், இவை எழும்போதெல்லாம் அவை ஆத்துமாக்களின் இழப்பில் முடிகின்றன. பிரிவினையை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் வரும்போதெல்லாம், நாம் இயேசுவையும் யோவான் ஸ்நானகரையும் முன்மாதிரியாகப் பின்பற்ற வேண்டும்." — The Desire of Ages, p. 181.

௨. நெருக்கடியைத் தணிக்க யோவானின் மனப்பான்மையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்? யோவான் 3:30.

"யோவானின் சீஷர்களைப் போலவே, வேலையின் வெற்றி முதல் வேலையாளைப் பொறுத்தது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். தெய்வீகத்திற்கு பதிலாக மனிதன் மீது கவனம் செலுத்தப்படுகிறது, பொறாமை உள்ளே வருகிறது, கடவுளின் வேலை சிதைக்கப்படுகிறது. இவ்வாறு அநாவசியமாக கௌரவிக்கப்படுபவன் தன்னம்பிக்கையைப் பேண ஆசைப்படுகிறான். கடவுளைச் சார்ந்திருப்பதை அவன் உணரவில்லை. மக்கள் வழிகாட்டுதலுக்காக மனிதனை சார்ந்திருக்க கற்பிக்கப்படுகிறார்கள், இதனால் அவர்கள் வழிகேட்டில் விழுகிறார்கள், மேலும் கடவுளிடமிருந்து வழிநடத்தப்படுகிறார்கள்.

"தேவனுடைய கிரியை மனுஷனுடைய சாயலையும் மேலெழுத்தையும் சுமப்பதல்ல. அவ்வப்போது கர்த்தர் பல்வேறு அமைப்புகளைக் கொண்டு வருவார், அவர்கள் மூலமாக அவருடைய நோக்கம் சிறப்பாக நிறைவேற்றப்படும். யோவான்ஸ்நானனோடே, 'அவன் பெருகவேண்டும், நானோ குறையவேண்டும்' என்று சொல்லி, தன்னைத் தாழ்த்திக்கொள்ள மனமுள்ளவர்கள் பாக்கியவான்கள். ”— Ibid., p. 182.


வெள்ளி பிப்ரவரி 14

தனிப்பட்ட மதிப்பாய்வு கேள்விகள்

௧. கிறிஸ்துவின் வேலையைப் பார்த்து யோவானின் சீஷர்கள் ஏன் பொறாமைப்பட்டார்கள்?

௨. யோவான் தம் சீடர்களிடம் என்ன அறிவித்தார்?

௩. பரிசுத்த ஆவியின் வரம் எதற்காக வழங்கப்படுகிறது?

௪. ஞானஸ்நானம் அதன் உண்மையான நோக்கத்தை எப்படி நிறைவேற்றுகிறது?

௫. இயேசுவும் யோவானும் தங்கள் சீஷர்களுக்கிடையே பிரச்சினை வரப்போவதைப் புரிந்துகொண்டபோது என்ன செய்தார்கள்?

 <<    >>